
""டாக்டர் ஆலோசனை இல்லாமல் மருந்து உட்கொண்டால் சிறுநீரகம் பாதிக்கும்,''என மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் நடந்த சிறுநீரகவியல் துறை முன்னேற்றம் குறித்த கருத்தரங்கில் சென்னை டாக்டர் முத்துசேதுபதி பேசினார்.அவர் பேசியதாவது :இன்று அதிக மருந்து, மாத்திரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. டாக்டர் ஆலோசனையில்லாமல், வலி மாத்திரைகளை அதிகமாக எடுப்பதால் சிறுநீரக நோய் வரும். சர்க்கரை நோய்,ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் முறையாக பரிசோதனை செய்து,டாக்டர் ஆலோசனைபடி மருந்துகளை எடுத்துக் கொண்டால் இந்நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை சிறுநீர், ரத்தப் பரிசோதனைகளை செய்ய வேண்டும். சிறுநீரில் புரதச்சத்து வெளியேறுகிறதா என கண்காணிக்க வேண்டும்.
குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது வலியால் அழுவர். சிலசமயம் சிறுநீரில் ரத்தம் வெளியாகும்.இவ்வாறு இருந்தால் டாக்டரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.கால்வீக்கம்,எழுந்தவுடன் முகம் வீங்குதல் சிறுநீரக நோய் அறிகுறிகள் என்றார். டாக்டர்கள் ராஜசேகரன், ஜெயகுமார், முரளி, சம்பத்குமார் பங்கேற்றனர்.
source: dinamalar