கேள்வி:
காதல் பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன? விரும்பிய வேற்று மதப் பெண்ணை இஸ்லத்திற்கு மாற்றி பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்யலாமா?
பதில்:
உங்கள் கேள்வியில் மூன்று விஷயங்கள் உள்ளன.
1) காதலிக்கலாமா என்பது முதல் விஷயம்:
காதல் என்பதற்கு ஒரு ஆண் ஒரு பெண்ணை
விரும்புதல் என்றோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணை விரும்புதல் என்றோ பொருள்
கொண்டால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. இன்னும் சொல்லப் போனால்
விரும்பித் தான் திருமணமே செய்ய வேண்டும்.
இதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. வலிமையான ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.
(காத்திருக்கும்
காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ
உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ்
அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி
அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும்
முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை
அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை
மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:235
கணவனை இழந்த பெண்கள் மற்ற பெண்களை விட அதிகக் கட்டுப்பாடு
விதிக்கப்பட்டவர்கள். அவர்கள் அலங்காரம் செய்யக்கூட அவர்களுக்கு அனுமதி
இல்லை. கனவனை இழந்து இத்தாவில் இருக்கும் போது அவர்களைத் திருமணம் செய்து
கொள்வதாக அவர்களிடம் ஆண்கள் வாக்களிக்கக் கூடாது; ஆனாலும் சாடைமாடையாக்
பேசலாம் என்று அல்லாஹ் கூறுகிறான். இத்தாவில் இல்லாத மற்ற பெண்களிடம்
ஆண்கள் பேசலாம் என்பதும் தந்து விருப்பத்தை அவர்களிடம் தெரிவிக்கலாம்
என்பதும், திருமணம் செய்து கொள்வதாக வாக்களிக்கலாம் என்பது இந்த வசனத்தில்
அடங்கியுள்ளது.
இது தான் அனுமதிக்கப்பட்ட காதல் என்பது. இதைக் கடந்து திருமணத்துக்கு முன் ஒரு பெண்ணுடன் தனித்திருப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி 3006,
திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரின் முன்னிலையில் இல்லாமல் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்பதும் நபி மொழி
புஹாரி 5233
இந்த நபிமொழி காதலுக்கு உரிய சரியான் எல்லைக் கோடாக அமைந்துள்ளது.
தொலைபேசியில் இருவரும் தனியாகப் பேசுவதும் இதில் அடங்கும். ஏனெனில் நேரில்
தனியாக இருக்கும் போது பேசும் எல்லாப் பேசுக்களையும் பேச வழிவகுக்கும்.
எனவே தன்னுடன் மற்றொருவரை வைத்துக் கொண்டே தவிர எந்த ஆணும் எந்தப்
பெண்ணுடனும் பேசக் கூடாது. திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரை
அருகில் வைத்துக் கொள்ளச் சொல்வதற்குக் காரணம் எந்த வகையிலும் வரம்பு
மீறிவிடக் கூடாது என்பதற்காகத் தான்.
இந்த வரம்பை மீறி சேர்ந்து ஊர் சுற்றுவது தனிமையில் இருப்பது, கணவன்
மனைவிக்கிடையே மட்டும் பேசத்தக்கவைகளைப் பேசிக் கொள்வதற்கு அனுமதி இல்லை.
இதனால் பாரதூரமான விளைவுகள் ஏற்படுவதையும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
திருமணத்துக்கு முன்பே எல்லை மீறிவிட்டால் ஆண்களுக்கு இயல்பாகவே ஈடுபாடு
குறைந்து விடும். இதனால் திருமணம் நின்று போய்விடும். அப்போது பெண்கள்
பாதிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் உடலால் நெருங்காமல் தனியாக் இருந்து பின்னர் திருமணம் தடை
பட்டாலும் அதுவும் பெண்களைப் பாதிக்கும். ஏனெனில் எல்லாம் நடந்திருக்கும்
என்று தான் மற்றவர்கள் நினைப்பார்கள்.
அல்லது மனதார விரும்பிய பெண் ஒழுக்கம் கெட்டவள் என்று தெரிய வரும் போது
அவன் அப்பெண்ணை மறுக்கலாம். ஆனால் தனிமையில் இருவரும் இருந்ததைப்
பயன்படுத்தி அப்பெண் மிரட்டலாம். இதனால் அவளை வலுக்கட்டாயமாக திருமணம்
செய்யும் நிலை ஏற்படும். ஆனால் மற்றவர்கள் முன்னிலையில் தவிர எந்தச்
சந்திப்பும் நடக்கவில்லை என்றால இது போன்ற ஆபத்துகள் ஆண்களுக்கு ஏற்படாது.
பாலியல் பலாதகாரம் என்று கூறப்படும் பெரும்பாலானவை இந்த வகையைச்
சேர்ந்தது தான். விரும்பி ஒருவனுடன் ஊர் சுற்றி விட்டு அவன் மணமுடிக்க
மறுத்தால் இந்தப் புகாரை ஒரு ஆயுதமாகப் பெண்கள் பயன்படுத்துகிறார்கள்.
எனவே வரம்பு மீறிய காதல் என்பது மறுமையில் மட்டுமின்றி இவுலகிலும் கேடாகவே முடியும்.
2) பிற மதத்துப் பெண்ணை விரும்பலாமா என்பது உங்கள் கேள்வியில் உள்ள இரண்டாவது விஷயம்.
கணவனை இழந்திருந்த அனஸ் ரலி அவர்களின் தாயார் உம்மு ஸுலைம் அவர்களை
அபூதல்ஹா விரும்பினார். ஆனால் அவர் அப்போது முஸ்லிமாக இருக்கவில்லை. ஆனால்
உம்மு ஸுலைம் அவர்கள் இஸ்லாத்தை நீர் ஏற்றுக் கொண்டால் அதையே மஹராகக் கருதி
உம்மைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று உம்மு ஸுலைம் ரலி கூறினார்கள்.
அபூதல்ஹா (ரலி) அதை ஏற்று திருமணம் செய்து கொண்டார்கள்.
"அபூதல்ஹா
அவர்கள் தன்னை மணந்து கொள்ளுமாறு உம்மு ஸுலைம் அவர்களைக் கேட்டார். அதற்கு
உம்மு ஸுலம் ரலி அவர்கள் உம்மைப் போன்ற ஒருவரை மணந்து கொள்ள மறுக்க
முடியாது. ஆனால் நீர் காஃபிராக இருக்கிறீர். நானோ முஸ்லிமான பெண்ணாக
இருக்கிறேன். எனவே உம்மை மணந்து கொள்வது எனக்கு ஹலால் இல்லை. நீர்
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அதுவே எனது மஹராகும். வேறு ஒன்றும் உம்மிடம்
நான் கேட்க மாட்டேன் என்று கூறினார். உடன் அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.
அதுவே அவரது மஹராக ஆனது"
நஸயீ 4389
இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு ஸுலைம் அவர்கள் வீட்டில் ஒருவர்
என்று சொல்லும் அளவுக்கு அதிகமாக உம்மு ஸுலைம் மீது இரக்கம்
காட்டினார்கள். அடிக்கடி அவர்கள் வீட்டுக்குச் சென்று வருவார்கள். அவர்கள்
காலத்தில் இது நடந்துள்ளதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இது தெரியாமல்
நடந்திருக்க முடியாது.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நபி
(ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களின்
வீட்டைத் தவிர தம் மனைவிமார்களின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற்கும்
(அதிகமாகச்) செல்வதில்லை.அவர்களிடம் அது குறித்துக் கேட்கப் பட்ட போது,
நான் அவரிடம் இரக்கம் காட்டுகிறேன். அவருடைய சகோதரர் (ஹராம் பின் மில்ஹான்
(ரலி) அவர்கள்) என்னோடு (என் பிரசாரப் படை யினரோடு) இருந்த போது (பிஃரு
மஊனா என்னுமிடத்தில்) கொல்லப் பட்டார் என்று சொன்னார்கள்".
புஹாரி 2844
எனவே இதற்கு நபிகள் நாயகம் ஸல் அவர்களின் அங்கீகாரம் உள்ளது என அறியலாம்.
முஸ்லிமல்லாத ஒருவரை விரும்பினால –இஸ்லாத்தை எற்றுக் கொள்ள அவர்கள்
முன்வந்தால் –அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க தக்க காரணம் இல்லாமல்
மறுக்கலாகாது.
3) பெற்றோரைப் பகைத்துக் கொண்டு திருமணம் செய்யலாமா? என்பது உங்கள் கேள்வியில் உள்ள மூன்றாவது விஷயம்.
பெற்றோர்களுக்கு முடிந்த வரை புரிய வையுங்கள். நீங்கள் விரும்பக்
கூடியவர் மார்க்க அடிப்படையில் தகுதி இல்லாதவர் என்று அவர்கள் மறுத்தால்
அதை மீறுவது குற்றமாகி விடும். அவ்வாறு இல்லாமல் இன வெறி குல வெறி போன்ற
காரணத்துக்காக தகுதியுள்ள துணையை அவர்கள் மறுத்தால் அவர்களை மீறுவது
குற்றமாகாது.
இறைவனுக்கு மாறு செய்யும் விஷயத்தில் மனிதனுக்கு கட்டுப்படுதல் இல்லை என்பது நபி மொழி.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு
விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின்
கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவதும் கடமையாகும்.
(இறைவனுக்கு) மாறுசெய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ
(அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது".
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.