
நமது ஊரில் ட்ரஸ்ட் என்றும் தவ்ஹீத் ஜமாஅத் என்றும் இரண்டு செயல்படுகிறதே ட்ரஸ்ட்டாக செயல்படுவதற்கும் ஜமாத்தாக செயல்படுவதற்கும் என்ன வேறுபாடு
என்று சில சகோதரர்கள் கேட்கின்றனர்
இதுதான் அடிப்படை வேறுபாடு
ட்ரஸ்ட் என்பது குறிப்பிட்ட ட்ரஸ்டிகளைக் கொண்டு அமைக்கப்படும். பத்து பேர் அல்லது பதினைந்து பேர் கொண்ட ட்ரஸ்டை அமைத்துக் கொண்டால் அதற்கு அவர்கள் மட்டுமே உரிமை படைத்தவர்கள். ட்ரஸ்டிகளாக இல்லாதவர்கள் அதற்கு என்ன தான் உதவி செய்தாலும் அந்த ட்ரஸ்டில் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ட்ரஸ்டிகளின் எண்ணிக்கையைக் கூட்டுவது என்றாலும் குறைப்பது என்றாலும் அந்தப் பத்துப் பேர் ஒன்று கூடி மெஜாரிட்டி அடிப்படையில் சிலரைச் சேர்க்கலாம். அல்லது நீக்கலாம். உறுப்பினர் சந்தா செலுத்தி யார் வேண்டுமானாலும் அதில் உறுப்பினராக முடியாது. உறுப்பினர் அட்டை எல்லாம் கொடுக்க முடியாது. ட்ரஸ்டிகளில் ஒருவர் என்று சேர்க்கப்பட்டால் தான் அதில் உரிமை கொண்டாட முடியும்.
கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தாலும் அது குறித்த முடிவை அந்தப் பத்து பேர் தான் எடுக்க முடியும். மற்ற யாரும் தலையிட முடியாது.
ட்ரஸ்ட் என்றால் ட்ரஸ்டிகள் மட்டுமே அதன் உறுப்பினர்கள். அதாவது உறுப்பினர்களும் நிர்வாகிகளும் அவர்கள் மட்டுமே.
ஆனால் ஜமாத்தாக பதிவு செய்யப்பட்டால் அதன் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுபவர்கள் தான் நிர்வாகிகள். அதாவது நிர்வாகிகள் அல்லாத உறுப்பினர்கள் இருப்பார்கள். அவர்கள் தான் நிர்வாகிகளைத் தேர்வு செய்பவர்களாக இருப்பார்கள்.
உதாரணமாக ஒரு ஜமாத்தின் தலைவராக இருப்பவர் குற்றம் செய்து விட்டார் என்றால் அவரை ஜமாத்தின் பொதுக் குழுவைக் கூட்டி நீக்க முடியும்.
ஆனால் ஒரு ட்ரஸ்டின் தலைவராக இருப்பவர் குற்றம் செய்து அவரை நீக்க மக்கள் விரும்பினால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. பத்து ட்ரஸ்டிகளில் ஆறு பேர் அவரை நீக்க முடியாது என்று கூறி விட்டால் அவரை யாராலும் நீக்க முடியாது.
ஜமாத்துக்கு கிளை, மாவட்டம், மாநிலம் என்று பல மட்டங்கள் இருக்கும். ட்ரஸ்டுக்கு ஒரே மட்டம் தான் இருக்கும். அந்த பத்து பேருக்குள் அவர்கள் செயல்பட்டுக் கொள்ளலாம்.