FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, December 10, 2010

ஆஷுரா தினம்....

Friday, December 10, 2010
12:17 AM

“வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்"! (அல்குர்ஆன் 9:36)

இறைவனால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். இதை அல்லாஹ்வின் மாதமென்றும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இம்மாதத் திற்கென்று பல சிறப்புகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருந்த போதிலும், நபியவர்கள் காட்டித்தராத, மார்க்கத்திற்கு விரோதமான பல்வேறு மூடநம்பிக்கைகள் இம்மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் நிறைந்து காணப்படுகின்றன.

நபி மூஸா(அலை) அவர்கள், அல்லாஹ்வின் கிருபையால் வெற்றிபெற்று கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட தினமான ஆஷுரா தினத்தை ஒரு சாரார் களங்கப்படுத்தி அதை துக்கமிக்க நாளாக அனுஷ்டித்து வருகின்றனர்.

அலீ(ரலி) அவர்களை தூதராக ஏற்றுக் கொண்ட ஷியா கூட்டத்தினர், அலீ(ரலி) அவர்களின் மகனார் ஹூஸைன்(ரலி) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாளில் கொல்லப்பட்டார்கள் என்றும், அதற்காக துக்கம் அனுஷ்டிப்பதாகக் கூறி நெஞ்சில் அடித்துக் கொள்வது, ஒப்பாரி வைப்பது, ஊர்வலம் நடத்துவது, தீக்குண்டத்தை வலம் வருவது என்பன போன்ற வீணான காரியங்களை இஸ்லாத்தின் பெயரால் செய்து வருகின்றனர்.இவ்வாறு செய்வது பெரிய பாவமாகும். அது மட்டுமின்றி, எந்த ஒரு முஸ்லிமும் இப்படிச் செய்யக்கூடாது.
இது போன்று செய்தால் அவன் முஸ்லிம் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்... “கன்னத்தில் அடித்துக் கொண்டு, சட்டையைக் கிழித்துக்கொண்டு, அறியாமைக் காலத்து ஒப்பாரி வைப்பவன் என்னைச் சார்ந்தவனில்லை. அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி 1294, முஸ்லிம் 148, திர்மிதி 920, நஸயி 1827

இதில் வேதனையான விஷயம் என்னவென்றால்,துக்கம் என்ற பெயரில் மார்பில் அடித்துக் கொள்ளும் இந்த ஷியாக் கூட்டத்தினரின் செயலை சிலர் முஸ்லிம்கள் பெரிய சாதனையை செய்து விட்டதைப்போல் ரசிக்கின்றனர். அங்கே ஒன்று கூடுகின்றனர். ஆனால் இது போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியத்தை யார் செய்தாலும் அதை தடுக்க வேண்டும். அதற்கு சக்தியில்லையென்றால் இஸ்லாத்திற்கே கேவலம் ஏற்படுத்தும் இவர்களின் காரியங்களை பார்த்து வேதனைப்பட்டு ஒதுங்கி விட வேண்டும்.

ஏனெனில்,
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...(கவலையின் போது) ஒப்பாரி வைப்பவனையும், தலையைமழித்துக் கொள்பவனையும் ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனையும் விட்டு விலகிக் கொண்டேன் அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: முஸ்லிம் 149

இவர்கள்தான் இப்படியென்றால், தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் சிலரது காரியங்கள் இன்னும் படுமோசமாக இருக்கிறது. முஹர்ரம் பத்தாம் நாள் வந்த உடனேயே பஞ்சா எடுப்பது (ஐந்து விரல்களில் படும் அளவிற்கு மஞ்சளைக் கையால் தட்டி வீட்டுக் கதவுகளில் அப்புவது), ஹுஸைனார் பெயரில் மவ்லித் ஓதுவது, பத்தாம் நாளில் மட்டும் நோன்பு நோற்று யூதர்கள் வழியைப் பின்பற்றுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். இதுவெல்லாம் நபிகளாரின் வழிமுறைகளல்ல. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ ஸஹாபாக்கள் ஷஹீதானார்கள். ஸஹாபியப் பெண்கள் இறந்துள்ளார்கள். இவ்வளவு ஏன்? நபி(ஸல்) அவர்களுடைய பாசத்துக்குரிய மனைவி கதீஜா(ரலி) அவர்களும் இறந்துள்ளார்கள். இதற்காக நபி(ஸல்) அவர்கள் ஒப்பாரி வைத்தார்களா? நெஞ்சில் அடித்துக் கொண்டார்களா? சட்டையைக் கிழித்துக் கொண்டார்களா? தீக்குண்டத்தை சுற்றி வந்தார்களா? மொட்டையடித்துக் கொண்டார்களா? ஹுஸைனார் மவ்லித் ஒதினார்களா? இல்லவே இல்லை. நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டாத தடுத்துள்ள இந்த அனாச்சாரங்களை நாம் ஏன் செய்ய வேண்டும். இதனால் நன்மை கிடைக்குமென்றா? இல்லையே!. இது போன்ற காரியங்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள் என்றே நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
புதிய அனாச்சாரங்கள் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் (தள்ளி) விடும். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயி 1560

மேலும் ஆஷுரா தினம் என்பது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எப்படி சிறப்பு தினமாக கருதப்பட்டு வந்தது என்பதையும் விளங்க வேண்டும். ஏனெனில் சிறப்பு என்று எண்ணி நம் சமுதாயத்தினர் தவறான காரியங்களை செய்து வருகின்றனர்.முஹர்ரம் பத்தில் மேற்கூறிய காரியங்களை செய்யாமல் நபி (ஸல்)அவர்கள் நோன்பு நோற்குமாறு கற்றுத் தந்துள்ளார்கள்

“ரமளான் மாதத்தில் வைக்கப்படும் நோன்பிற்கு பிறகு சிறந்தது, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் வைக்கப்படும் நோன்பாகும் அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 1962

“ஆஷுரா தினத்தில் வைக்கப்படும் நோன்பு கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகும் எனக் கூறினார்கள் அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: முஸ்லிம் 1977

“நபி(ஸல்) அவர்கள் மதினா வந்தபோது ஆஷுரா தினத்தில் வேதக்காரர்கள் நோன்பு நோற்றிருந்தனர். அப்போது வேதக்காரர்கள், இன்றைய தினம் மகத்துவமிக்கதாகும். அல்லாஹ் நபி மூஸா(அலை) அவர்களை காப்பாற்றி ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கடலில் மூழ்கடித்தான். இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக நபி மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இவர்களைவிட நாம்தான் மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று கூறி ஆஷ{ரா தினத்தில் நோன்பு நோற்று மக்களையும் நோற்குமாறு கட்டளையிட்டார்கள் அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ்(ரலி) நூல்: புஹாரி 3145

“நபி(ஸல்) அவர்கள் மதினா வந்த போது எங்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இது நபி மூஸா(அலை) அவர்கள் வெற்றி பெற்ற தினமாக இருப்பதால்) யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்ணியப் படுத்தும் தினமாயிற்றே என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அடுத்த ஆண்டில் முஹர்ரம் 9ம் நாளிலும் நோற்போம் என்று கூறினார்கள் அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அபூதாவூத் 2087

ஆகவே, மேற்காணும் விஷயங்களை நன்கறிந்து புனிதமிக்க ஆஷுரா தினத்தைக் கண்ணியமாகக் கருதி முஹர்ரம் 9-10ல் நோன்பு நோற்று நன்மைகளை பெறுவோம். அது மட்டுமல்லாமல் தேவையில்லாத, மார்க்கம் காட்டித் தராத காரியங்களை செய்வதிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தினர்களையும் பாதுகாத்துக் கொள்வோம்!

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஆஷுரா தினம்.... Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top