FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, March 7, 2011

'கிரி்கெட் பைத்தியம்’ உங்களுக்கும் இருக்கிறதா?

Monday, March 7, 2011
8:18 PM


நம் நாட்டில் வாழும் பெரும்பாலான மனிதர்களிடம் தனியான ஓர் இடத்தை பிடித்திருக்கும் விளையாட்டு கிரி்கெட். அதற்குக் காரணம், நம் நாடு இவ்விளையாட்டில் உலக அளவில் கொடி கட்டிப் பறப்பது தான் என்று கூறினால், அது மிகையாகாது.ஒரு விளையாட்டை இரசிப்பது, அதற்காக நேரம் ஒதுக்குவது தவறு கிடையாது. ஆனால், அதற்கு அடிமையாகுவது தான் மகாத் தவறு. கிரிக்கட்டிற்கு அடிமையானவர்கள் வெளிப்படுத்தும் உணர்வு ‘கிரி்கெட் பைத்தியம்’  என வர்ணிக்கப்படுகிறது. இந்த ‘கிரிக்கெட் பைத்தியம்’ நமது முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் விட்டு வைக்கவில்லை என்பது தான் வேதனைக்குரிய விடயம். கிரிக்கட் போட்டிகள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் இவர்கள் தமது உலக, மறுமை கடமைகளை மறந்து விடுகிறார்கள்.



ஆண், பெண் இரு பாலாரும் உலக ரீதியாக செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம். தொழில் புரிவது, சமூக சேவைகளில் அதிகம் ஈடுபடுவது, வாக்குகளை நிறைவேற்றுவது போன்றவை ஆண்களுடன் சம்பந்தப்பட்ட கடமைகள். சமையல், பிள்ளை வளர்ப்பு, கணவனை கவனிப்பது, பெற்றோரை அதிகம் கவனிப்பது போன்றவை பெண்களுடன் சம்பந்தப்பட்ட கடமைகள். இது போக உரிய நேரத்தில் தொழுவது, குர்ஆன் ஓதுவது, தஃவா பணியில் ஈடுபடுவது, உபதேசங்களை செவிமடுப்பது, அத்கார்களை மனனமிடுவது போன்றவை மறுமை ரீதியான கடமைகள்.இவை அனைத்தையும் உதாசீனம் செய்கின்ற மனோ நிலையை இந்த ‘கிரிக்கெட் பைத்தியம்’ உருவாக்குகிறது.



சகோதரர்களே! கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது பெரும்பாலான மக்கள் மிகவும் ஆர்வத்துடன் மெய் மறந்தவர்களாக அவற்றை கண்டு கழிக்கின்றனர். முஸ்லிம்களாகிய நாம் மறுமை இன்பத்திற்கு முதலிடம் கொடுக்கிறோமா? அல்லது உலக இன்பத்திற்கு முதலிடம் கொடுக்கிறோமா? என்பதை ஒரு கணம் எம்மை நாங்களே பரிசோதனை செய்து பார்ப்பதற்கு கிரிக்கட் நடைபெறும் சந்தர்ப்பங்கள் ஒரு நல்ல தருணம்.

நாம் கிரிக்கெட் போட்டிகளை ரசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பள்ளிவாசலிலிருந்து ‘ஹய்யஅலஸ்ஸலா (தொழுகையின் பக்கம் விரைந்து வாருங்கள்)’ , ‘ஹய்யஅலல் பகலாஹ் (வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்)’ என்று ஒரு பகிரங்க அழைப்பு விடுக்கப்படுகிறது. 

இச்சந்தர்ப்பத்தில் நமது உள்ளங்கள் இவ்வழைப்பை ஏற்க உடன்கடுகின்றதா? அல்லது மறுக்கின்றதா?

கிரிக்கட் பிரியர்களாக உள்ள நமது உள்ளங்கள் இப்படித் தடுமாறுகின்றது.

  • “இந்த ஓவர் முடியட்டும்”
  • “இவன்ட சென்சரிக்குப் பிறகு போவோம்”
  • “மெச் முடிகின்ற கட்டம், முடிந்த பிறகு போவோம்”
  • “பவர் பிளே முடிந்த பிறகு தொழுவோம்”
  • “அடுத்த தொழுகை வரை நேரம் இருக்குது தானே. அதற்குள் தொழுது கொள்வோம்”

இப்படிப் பல ஊசலாட்டங்கள். 

இதிலிருந்து எப்படியோ தப்பி தொழுகைக்காக பள்ளிக்கு சென்று விட்டால் தொழுது கொண்டிருக்கும் போதே இன்னும் சில ஊசலாட்டங்கள். 

  • “அவசரமாகத் தொழுது விட்டு உடனே வீட்டுக்குச் செல்ல வேண்டும்”
  • “அவன் அவுட் ஆகி விட்டானோ தெரியாது”
  • “அவன்ட சென்சரிய பார்க்கனும்”
  • “முதல் இன்னிங்ஸ் முடிகின்ற கட்டத்தில் வந்தேன். எவ்வளவு ரன்ஸ் அடித்தார்களோ தெரியாது”

இப்படியே தொழுகை முடிந்து விடும்.பிறகு துஆ, சுன்னத் ஒன்றுமே இல்லாமல் உடனே ஓடி விடுகின்றோம்.உண்மையிலேயே இவ்வாறான ஒரு நிலை எமக்கும் இருக்குமென்றால் நிச்சயமாக “கிரிக்கட் பைத்தியம்” எமக்கும் பிடித்து விட்டது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

குறித்த ஓர் அணியின் மீது அளாதியான பற்று வைத்து அவ்வணி மட்டும் தான் வெற்றி பெற வேண்டுமென வெறி பிடித்து அலைவது ‘கிரிக்கட் பைத்தியத்தின’ இன்னொரு வெளிப்பாடாகும்.இவர்கள் குறிப்பிட்ட அவ்வணி வெற்றி பெற்று விட்டால் ஊர் முழுக்க பட்டாசு கொழுத்தி அந்நாளை கொண்டாடுகின்றனர். அதே நேரம், தோற்றுப் போய் விட்டால் அவ்வணி வீரர்களின் வீடுகளை உடைக்கின்றனர். வாகனங்களை சேதமாக்குகின்றனர். இவை இஸ்லாம் அங்கீகரிக்கும் நடைமுறைகளா?

ஷைத்தான் நம்மிடம் இந்தப் ‘பைத்தியத்தைத்’ தான் எதிர்ப்பார்க்கிறான். அவனது எதிர்ப்பார்ப்பை நாம் விரும்பியோ விரும்பாமலோ நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். 

அவன் கூறிய ஒரு செய்தியை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

“என் இறைவனே! நீ என் வழியைத் தடுத்துக் கொண்டதன் காரணமாக பூமியிலுள்ள (இன்பங்களை) நான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்” (சூரா அல் ஹிஜ்ர் 15: 39)

சகோதரர்களே! ஒரு மனிதன் ஒரு தவறிலிருந்து தன்னைத் திருத்திக் கொள்ள ஒரேயொரு நல்ல வார்த்தை போதும்.பனூ இஸ்ரவேலர்களுடைய காலத்தில் வாழ்ந்த ஒரு பெண் கூறிய “அல்லாஹ்வை பயந்து கொள்” என்ற வார்த்தை அவளுடன் விபச்சாரம் புரியத் தயாரான இளைஞனைத் அவ்வீனச் செயலை விட்டும் தடுத்தது.

அதே போன்று, உண்மை முஸ்லிம்களாக திகழ விரும்புகின்ற நாம் ‘கிரிக்கட் பைத்தியத்திலிருந்து’ நம்மைத் திருத்திக் கொள்ள விரும்பினால் அல்லாஹ் பல வார்த்தைகளைக் கூறுகிறான். அவை நம்மைத் திருத்தக் கூடும்.

அல்லாஹ் கூறுகிறான்:

وللآخرة خير لك من الأولى
“உமக்கு உலகத்தை விட மறுமை மிகச் சிறந்தது”. (சூரா அல்லுஹா 93: 4)

கிரிககெட் மூலம் அற்ப உலக இன்பம் கிடைக்கிறது. தொழுகை மூலம் நிரந்தர மறுமை இன்பம் கிடைக்கிறது. உலக இன்பத்தை விட மறுமை இன்பம் தான் சிறந்தது என்பதை நம் உள்ளங்கள் உணர்ந்தால் தொழுகைக்கு முன் கிரிக்கட் தூசியாகி விடும்.

மேலும் அல்லாஹ் விசுவாசிகளைப் பார்த்துக் கேட்கிறான். 

“ விசுவாசிகளே! அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் புறப்படுங்கள் என்று உங்களுக்கு கூறப்பட்டால் (அவ்வாறு புறப்படாமல்) நீங்கள் ஊரில் தங்கிவிடுவதன் காரணம் என்ன? மறுமையை விட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டு நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமைக்கு முன்பாக இவ்வுலக வாழ்க்கை மிகவும் அற்பமானதே” (சூரா அத் தவ்பா 9: 38)

மேலும் விசுவாசிகளின் உயர்ந்த பண்புகளை அல்லாஹ் இப்படி வர்ணிக்கிறான்.

“அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகியிருப்பார்கள்” (அல் முஃமினூன் 23: 3) 

இப்படி உலக இன்பத்தை விட மறுமை இன்பம் தான் சிறந்தது என்பதைக் குறிக்கும் வஹியின் வார்த்தைகள் ஏராளம் ஏராளம்.

எனவே, வஹியின் இவ்வழிகாட்டுதலை ஏற்று நம் உள்ளங்களை மாற்றி ‘கிரிக்கெட் பைத்தியத்தை’ விட்டும் முழுமையாக நீங்கி மறுமை இன்பத்திற்கு முதலிடம் கொடுத்து தொழுகையின் பக்கமும் நன்மையான அனைத்து காரியங்களின் பக்கமும் விரைந்து செல்ல எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: 'கிரி்கெட் பைத்தியம்’ உங்களுக்கும் இருக்கிறதா? Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top