கேட் தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை. முதலில் உங்களுக்கு ஏற்ற பாடப்பிரிவில் இருந்து பதிலை துவக்குங்கள், அதற்கு முன் கேள்வியை நன்கு படித்து பாருங்கள் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி மையங்கள் வழங்கும் ஏம்.பி.ஏ. படிப்பில் சேர நடத்தப்படும் இந்த காமன் அட்மிஷன் டெஸ்ட் (கேட்) அக்டோபர் 22ம் தேதி முதல் நவம்பர் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது.
3,000 மாணவ சேர்க்கை இடங்களுக்காக சுமார் 2,05,000 மாணவர்கள் கேட் தேர்வை எழுத உள்ளனர். புதிய தேர்வு முறையில் 2 தேர்வுகள் நடத்தப்படும். முதல் தேர்வில் குவான்டிடேட்டிவ் அபிலிடி மற்றும் டேட்டா இன்டர்பிரிடேஷன் பகுதிகள் அடங்கியிருக்கும்.
இரண்டாவது தேர்வில் வெர்பல் அபிலிடி மற்றும் லாஜிகல் ரீசனிங் பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.
இந்த தேர்வுகளில், ஒவ்வொரு பகுதிக்கும் என தனித்தனியாக நேரம் ஒதுக்கப்படும். அதாவது ஒரு தேர்வுக்கு 140 நிமிடங்கள் வழங்கப்படும். இதில் ஒரு பகுதிக்கு பதில்களை எழுதி முடிக்க 70 நிமிடம், அடுத்த பகுதிக்கு 70 நிமிடம் என பிரித்து வழங்கப்படும்.
இதுவரை, மொத்தமாக 1.35 நிமிட நேரம் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுவிடும், ஒன்றை எளிதாக முடிக்கும் மாணவர், அடுத்த பகுதிக்குச் சென்று அதிக நேரம் ஒதுக்கி அதை முடிக்க இயலும். ஆனால் தற்போதைய முறையில், ஒவ்வொரு பகுதிக்கும் என தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால், அனைத்து பாடப்பிரிவிலும் மாணவர்கள் திறமையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
ஒரு வேளை முதலில் நீங்கள் எடுக்கும் பகுதியை 70 நிமிடங்களுக்குள் முடித்துவிட்டாலும், அடுத்த பகுதியை எழுத முடியாது, 70 நிமிடம் முடிந்த பிறகே அடுத்த பகுதியை எழுதத் துவங்க வேண்டும். இது மாணவர்களை சற்று பாதிக்கும் விஷயமாகவே கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.
மேலும், நேர மேலாண்மை என்பதே இந்த நுழைவுத் தேர்வுக்கு அடிப்படையான ஒன்றாக அமைந்துள்ளது.
உங்களுக்கு எந்த பகுதி எளிதாக வருமோ அதை முதலில் தேர்வு செய்யுங்கள். எந்த வொரு கேள்வியையும் நன்கு நிதானமாக படித்துப் பாருங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மாணவர் 2.3 நிமிடங்களை மட்டுமே செலவிட வேண்டும். அதிகபட்சமாக 2.5 நிமிடங்களில் பதிலை முடித்துவிட வேண்டும் என்று கல்வியாளர்கள் தேர்வெழுதவிருக்கும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
ஏராளமான இணையதளங்கள், இலவச வினாத்தாள் மாதிரிகளை வெளியிட்டுள்ளன. அவற்றில் தேர்வெழுதி மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம். நேர மேலாண்மையையும் அப்போது கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.
பாடங்கள் எதுவும் மாற்றப்படவில்லை, நேரப் பங்கீடு மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நேர மேலாண்மையை கவனத்தில் கொண்டு பயிற்சி எடுத்தால் அதையும் எளிதாக செய்ய முடியும். வாழ்த்துக்கள்.
நன்றி-தினமலர்