ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் மன்னர் ஹமாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் ஷியா பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.
போராட்டத்தில் இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் மனாமாவில் மீண்டும் போராட்டம் வெடித்தது. ஷியா பிரிவினரும், மன்னருக்கு ஆதரவாக செயல்படும் சன்னி பிரிவினரும் மோதிக் கொண்டனர். எனவே கலவரம் மூண்டது.
கலவரத்தை அடக்க போலீசார் தண்ணீர்புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை வீசினார்கள். இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு போராட்டம் வலுவடைந்துள்ளது.மனாமா நகரம் முழுவதும் மோதல்கள் வெடித்துள்ளன. இதனால் அங்கு கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பாங்கிகள் மூடப்பட்டன.
எனவே அங்கு தெருக்கள் முழுவதும் பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது.போராட்டத்தை அடக்க சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளை சேர்ந்த ராணுவம் வர வழைக்கப்பட்டுள்ளது. அவை பஹ்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இது 3 மாதத்துக்கு அமலில் இருக்கும். இதற்கான உத்தரவை மன்னர் ஹமாத் பிறப்பித்துள்ளார்.
நன்றி-மாலை மலர்