FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, August 15, 2011

முஸாஃபஹா கைகுலுக்குதல்

Monday, August 15, 2011
7:56 PM
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கை குலுக்குவதும் நபிவழியாகும்.



'ஏமன் வாசிகள் வந்துள்ளனர். முஸாஃபஹா மூலம் முதன் முதலில் நமக்கு முகமன் கூறியவர்கள் அவர்களே' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அபூதாவூத் 4537

ஏமன் மக்களின் முஸாஃபஹா செய்யும் வழக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதன் மூலம் அங்கீகாரம் செய்கின்றனர். கஃபு பின் மாலிக் (ரலி) அவர்கள் உள்ளிட்ட மூன்று தோழர்கள் தபூக் போரில் பங்கெடுக்கத் தவறியதால் அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில நாட்கள் சமூகப் புறக்கணிப்பு செய்திருந்தனர். பின்னர் அம்மூவரும் மன்னிக்கப்பட்டதாக அல்லாஹ் ஒரு வசனத்தை அருளிய பின் கஃபு பின் மாலிக் (ரலி) அவர்கள் பள்ளிக்குச் சென்றனர். அது பற்றி அவர்கள் குறிப்பிடும் போது நான் பள்ளிவாசலில் நுழைந்தேன். அங்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தனர். தல்ஹா (ரலி) அவர்கள் உடனே என்னை நோக்கி வந்து என்னிடம் முஸாஃபஹா செய்து நல்வாழ்த்து தெரிவித்தார் என்று குறிப்பிடுகிறார்கள். 
நூல் : புகாரி 4418, 


நான் சில பெண்களுடன் சேர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பைஅத் (உறுதிமொழி) எடுக்கச் சென்றேன். அப்போது அவர்கள் 'உங்களுக்கு இயன்றவரை சக்திக்கு ஏற்றவரை நிறைவேற்றுங்கள்' என்று குறிப்பிட்டார்கள். 'பெண்களிடம் நான் முஸாஃபஹா செய்ய மாட்டேன்' எனவும் கூறினார்கள்.
நூல் : இப்னுமாஜா 2865

'பெண்களிடம் நான் முஸாஃபஹா செய்ய மாட்டேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து ஆண்களிடம் முஸாஃபஹா செய்பவர்களாக இருந்தனர் என்பதை விளங்க முடியும்

ஆண்கள், ஆண்களுக்கும் பெண்கள் பெண்களுக்கும் முஸாஃபஹா செய்வது நபிவழியில் உள்ளதாகும்.

முஸாஃபஹா செய்யும் சரியான முறையையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். தமிழக முஸ்லிம்கள் பலர் முஸாஃபஹாச் செய்யும் போது தமது இரு கைகளால் மற்றவரின் இரு கைகளைப் பிடிக்கின்றனர். வேறு சிலர் இவ்வாறு முஸாஃபஹாச் செய்யும் போது மற்றவரின் இடது கை கட்டை விரலை அழுத்திப் பார்க்கின்றனர்.

கில்று என்பவர் இன்னும் உயிரோடு உள்ளார், அவருக்கு இடது கை கட்டை விரலில் எலும்பு இருக்காது. அவர் எந்த எந்த மனிதரின் தோற்றத்திலும் வருவார். அவரை முஸாஃபஹா செய்து விட்டால் நாம் அவ்லியா ஆகலாம் என்று மார்க்க அறிவு இல்லாத மூடர்கள் கட்டிய கட்டுக் கதை தவிர இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

வலது கையால் மற்றவரின் வலது கையைப் பிடிப்பதே முஸாஃபஹா செய்யும் சரியான முறையாகும்.
ஒரு உள்ளங்கையை மறு உள்ளங்கையில் சேர்த்தல் என்பது தான் முஸாஃபஹா என்ற சொல்லின் நேரடி அர்த்தமாகும்.


இருவருமே ஒரு கையால் முஸாஃபஹா செய்யும் போது தான் இந்த நிலை ஏற்படும். இரண்டு கைகளால் செய்யும் போது இடது உள்ளங்கை மற்றவரின் வலது புறங்கையில் தான் படும். இரு பக்கமும் உள்ளங்கைகள் சந்திக்காது. எனவே முஸாஃபஹா என்ற சொல்லின் நேரடிப் பொருளே ஒரு கையால் தான் செய்ய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
அகராதியை மேற்கோள் காட்டி இப்னு ஹஜர், இப்னுல் கய்யிம் போன்ற பல அறிஞர்கள் ஒரு கையால் முஸாஃபஹாச் செய்வது தான் சரியான முறை என்கின்றனர்.

இரண்டு கைகளால் முஸாபஹாச் செய்ய வேண்டும். அல்லது செய்யலாம் என்ற கருத்துடையவர்கள் புகாரியில் இடம் பெற்ற ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.

முஸாஃபஹா என்ற பாடத்தில் இந்த ஹதீஸை புகாரி இமாம் பதிவு செய்திருந்தாலும் அந்த ஹதீஸக்கும் முஸாஃபஹாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு அத்தஹிய்யாத் கற்றுத் தந்தனர். அப்போது எனது ஒரு கை அவர்களின் இரண்டு கைகளுக்கிடையே இருந்தது என்பது தான் அந்த ஹதீஸ்.
நூல் : புகாரி 6265
ஒருவருக்குக் கற்றுக் கொடுக்கும் போது ஆசிரியர் தமது இரு கைகளால் மாணவரின் ஒரு கையைப் பிடித்துக் கொண்டு சொல்லிக் கொடுக்கலாம் என்பது தான் இதிலிருந்து தெரிகிறது. ஒருவரைச் சந்திக்கும் போது செய்யும் முஸாஃபஹா பற்றி இது குறிப்பிடவில்லை.

மேலும் இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு கைகளையும் இப்னு மஸ்வூத் (ரலி) ஒரு கையையும் பயன்படுத்தியுள்ளனர். முஸாஃபஹாவுக்கு இதை ஆதாரமாகக் காட்டுவோர் 'ஒருவர் ஒரு கையையும் மற்றவர் இரு கைகளையும் பயன்படுத்த வேண்டும்' என்று கூறுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


 -சந்திக்கும் வேளையில்
 ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: முஸாஃபஹா கைகுலுக்குதல் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top